மகத்தான இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய்.நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய் நாடியோரை இழிவுபடுத்துகிறாய்.நன்மைகள் உன் கைவசமே உள்ளன.நீ அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்' என்று கூறுவீராக! (3:26)
கடந்த 04-07-10 ஞாயிறு அன்று சென்னை தீவுத்திடலில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுச்சியுடன் பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உங்களுக்கு தருகிறோம்.
நீதிபதி மிஸ்ரா, சச்சார் ஆகியோருக்கு நன்றி
இந்திய நாட்டை உருவாக்குவதிலும்,இந்தியாவின் அடிமைத்தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரையையும் வழங்கியுள்ளது.முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இதற்காக இம்மாநாடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.