அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.
இறைவனின் மாபெரும் கிருபை:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.
இவர்களுக்கு மத்தியில், எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ அல்லது அமைப்பின் தலைவர்களை தனியாகச் சந்தித்து டேபிளுக்கு கீழே அழுத்தும் வேலைகளுக்கோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.
கொள்கை ரீதியாக மடித்துக்கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கும் யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம் எனலாம். சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரப்போகும் தேர்தலையும் சமுதாயத்தின் நன்மையை முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்தது.
















